ஜிஎஸ்டி வரி குறைப்பு
இந்திய ஆட்டோமொபைல் துறை அண்மைக் காலங்களில் சந்தித்த முக்கிய சவால்களுக்குப் பின், அரசு அறிவித்துள்ள புதிய ஜிஎஸ்டி (GST) விகித மாற்றங்கள் தொழில்துறைக்கும் பொதுமக்களுக்கும் பெரும் நன்மை சேர்க்கும் மாற்றமாக அமைந்துள்ளது. செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் இந்த விகிதக் குறைப்புகள், உற்பத்தி, விற்பனை மற்றும் வாகனத் தேவை ஆகியவற்றில் நேரடியாக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன.
முன்னர் 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட சிறிய கார்கள், இனி 18% மட்டுமே. இதன் மூலம் கார் விலை குறைந்து, நடுத்தர வர்க்க மக்கள் புதிய கார் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். விற்பனை அளவின் உயர்வு உற்பத்தியாளர்களுக்கும் நல்ல செய்தியாகும்.
350cc வரை உள்ள மோட்டார்சைக்கிள்கள் முன்பு 28% ஜிஎஸ்டி கட்டணத்தில் இருந்தன. இப்போது 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதால் பைக் விலை குறையும்; விற்பனையும் அதிகரிக்கும்.
பெரிய கார்கள் மற்றும் 350cc மேல் உள்ள மோட்டார்சைக்கிள்கள் வரி விகிதம் 40% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்தவித கூடுதல் செஸ் (cess) இல்லாமல் இந்த விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், உயர்ந்த விலை வாகனங்கள் வாங்க விரும்புவோருக்கும் தெளிவான கட்டமைப்பு கிடைக்கிறது.
அனைத்து வாகன பாகங்களுக்கும் ஒரே மாதிரியாக 18% ஜிஎஸ்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு பல்வேறு விகிதங்களில் இருந்த பாகங்கள் இப்போது ஒரே அளவாக வரிவிதிப்பதன் மூலம், உதிரிபாக உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கணக்கிடும் வசதியையும் விலை குறைவையும் தருகிறது.
டிராக்டர் மற்றும் அதன் பாகங்களுக்கான GST விகிதம் 18% மற்றும் 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குறியது. இந்த ஜிஎஸ்டி சீரமைப்பு டிராக்டர் தொழிலை வளர்ச்சி பாதையில் பயணிக்க உதவும்.
சுற்றுச்சூழலுக்கு சாதகமான மின்சார வாகனங்களின் (EVs) ஜிஎஸ்டி விகிதம் 5% என்று மாற்றமின்றி தொடர்கிறது. இது பசுமையான போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிக்கின்றது.
இந்த புதிய ஜிஎஸ்டி விகித மாற்றங்கள், இந்திய ஆட்டோமொபைல் சந்தையை மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய முக்கியச் சிக்னலாக பார்க்கப்படுகின்றன. வாகனம் வாங்க விரும்புவோருக்கு விலை குறைவு, நிறுவனங்களுக்கு விற்பனை வளர்ச்சி, நாட்டிற்கு பொருளாதார முன்னேற்றம் – என பல்வேறு அடுக்குகளில் நன்மை விளைவிக்கும் இந்த முடிவுகள், எதிர்காலத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறையை உலகளவில் போட்டித் திறனுடன் நிலை நிறுத்தும்.



