தொழிலாளிகளின் முதலாளி : மறைந்தாலும் மனதை விட்டு நீங்காத ரத்தன் டாடா
தொழிலாளர்களுக்கு ஓடிஓடி உதவிய முதலாளியாக திகழ்ந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் நேற்று மும்பை தனியார் மருத்துவமனையில் காலமானார்.1991 மார்ச்சில் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, 2012 டிச., 28ல் ஓய்வு பெற்றார்.
அவரது பதவிக்காலத்தில், டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தது. 1991ல் வெறும் 10,000 கோடி ரூபாய் இருந்த விற்றுமுதல், 2011- – 12ல், 100.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. மேலும், ரத்தன் டாடா பொறுப்பில் இருந்தபோது, டெட்லி, கோரஸ், ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டன.சொந்த கார் என்ற கனவு ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருந்ததை மாற்றியவர் ரூ.1 லட்சத்தில் டாடா நானோ காரை அறிமுகம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆண்டுதோறும் நன்கொடைகளை அள்ளி கொடுத்தார்.
பல்வேறு அறக்கட்டளைகளுக்கு டாடா நிறுவனம் சார்பில் கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது.வாழும்போதே கோடிகளை கொட்டி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து உதவி வந்தார். ஏழைகளுக்கு உதவி செய்யும் குணத்தை கொண்ட ரத்தன் டாடா அள்ளி அள்ளி கொடுத்த நன்கொடைகள் ஏராளம்.இந்தியாவில் கல்வி, மருத்துவம், குடிநீர், விவசாய துறைகள் மீது ரத்தன் டாடாவுக்கு தனி அக்கறை என்பது இருந்து வந்தது. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் கல்வி, மருத்துவம், குடிநீர், விவசாயத்துக்கு தேவையான உதவிகளை தனது நிறுவனம் மூலம் ரத்தன் டாடா வழங்கினார்.இப்படி பெரும் கோடீஸ்வரராக இருந்தாலும் கூட ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் மீது அக்கறையுடனே வாழ்ந்து தனது சகாப்தத்தை முடித்து கொண்டார். இதனால் ரத்தன் டாடா தொழிலாளிகளின் முதலாளி.