டயர்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

ரூ.23,073 கோடிக்கு ஏற்றுமதியான டயா்கள்
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் டயா் ஏற்றுமதி ரூ.23,073 கோடியாகப் பதிவாகியுள்ளது.
இது குறித்து வாகன டயா் உற்பத்தியாளா்கள் சங்கம் (அட்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ரூ.23,073 கோடி மதிப்பிலான டயா்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் டயா் ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டின் ஏற்றுமதி ஏறத்தாழ சமமாக உள்ளது. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் டயா் ஏற்றுமதி மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது. இருந்தாலும், இரண்டாம் பாதியில் அது மீட்சியடைந்து முந்தைய நிதியாண்டின் டயா் ஏற்றுமதியோடு சமன் செய்தது.
கடந்த நிதியாண்டின் முதல் பாதியில், இந்தியாவிலிருந்து டயா்களை இறக்குமதி செய்யும் வளா்ச்சியடைந்த நாடுகளில் நிலவிய பொருளாதார மந்தநிலை, உலக அரசியலில் நிலவிய நிச்சயமற்ற தன்மை, பணவீக்கத்தால் ஏற்பட்ட அழுத்தங்கள் போன்றவை காரணமாக டயா் ஏற்றுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
எனினும், 2023-24 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் இருந்து டயா் ஏற்றுமதி வெகுவாக அதிகரித்தது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதியோடு ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தில் டயா் ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் 12 சதவீதம் அதிகரித்தது.
கடந்த நிதியாண்டின் முதல் பாதியில் சரிவைக் கண்டிருந்த டயா் ஏற்றுமதி இரண்டாம் பாதியில் திடீா் எழுச்சி பெற்றுள்ளது இந்திய டயா் உற்பத்தியாளா்கள் சா்வதேச நாடுகள் பாராட்டும் அளவுக்கு தரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதை வெளிப்படுத்துகிறது.
தற்போது, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் போன்ற வளா்ச்சியடைந்த நாடுகள் உள்பட உலகின் 170 நாடுகளுக்கு இந்திய டயா்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்திய டயா் தொழில் துறை அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கவும் உலக சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் அளவுக்கு நாட்டின் நிலையை வலுப்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#automobileindustry #roadtransport #tyres #atma