முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 161கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடிய டாடா ஏஸ் எலக்ட்ரிக் வாகனம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்களை உற்பத்தி செய்வதிலும், விற்பனை செய்வதிலும் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களுள் டாடா மோட்டார்ஸ் முன்னணி நிறுவனமாகும். குறிப்பாக, டாடா மோட்டார்ஸின் ஏஸ் வாகனத்திற்கு அதிக எண்ணிக்கையில் கஸ்டமர்கள் உள்ளனர். .
கமர்ஷியல் வாகனங்களிலும் தனது எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவரும் முயற்சியாக முற்றிலும் புதிய ஏஸ் இவி 1000 என்கிற எலக்ட்ரிக் வாகனத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. எலக்ட்ரிக் பவரில் இயங்கும் மினி டிரக் வாகனமாக உருவாக்கப்பட்டுள்ள ஏஸ் இவி 1000 -இன் பெயரில் உள்ள 1000 என்பது 1000 கிலோ (1 டன்) எடையை குறிக்கிறது. அதாவது, இந்த வாகனம் அதிகப்பட்சமாக 1 டன் எடை கொண்ட பொருட்களை சுமக்கும் என்பதாகும்.
புதிய டாடா ஏஸ் இவி 1000 எலக்ட்ரிக் வாகனத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதில் பொருத்தப்படும் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 161கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்பதாகும். இந்த எலக்ட்ரிக் வாகனத்தில் 27 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து அதிகப்பட்சமாக 130 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வாகனத்தில் பெறலாம். இவ்வாறான மினி டிரக் வாகனங்களில் கிரேட்-அபிலிட்டி நாம் முக்கிய கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். அதாவது, ஏறுமுகமான சாலைகளில் வாகனம் எந்த அளவுக்கு திறம்பட ஏறும் என்பதாகும். புதிய ஏஸ் இவி 1000 வாகனம் முழு சுமைகள் உடன் ஏறுமுகமான சாலைகளில் மென்மையான இயக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஃப்ளீட் எட்ஜ் டெலிமேட்டிக்ஸ் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த எலக்ட்ரிக் வாகனத்தில் இடம்பெற்றுள்ளன. கரடு முரடான பொருட்களையும் ஏற்றி செல்லும் வகையில் இந்த வாகனத்தின் லோடு பெட் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதையும் தாண்டி, இந்த வாகனத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு டாடாவின் உதவி மையங்கள் உள்ளன.
நாடு முழுவதும் டாடா மோட்டார்ஸின் 150க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகன உதவி மையங்கள் உள்ளன. பேட்டரி கூலிங் சிஸ்டம் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஏஸ் இவி 1000 எலக்ட்ரிக் வாகனத்திற்கு 5 வருட விரிவான பராமரிப்பு பேக்கேஜை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, இந்த வாகனத்தின் பேட்டரிக்கு 7 வருட வாரண்டியையும் டாடா நிறுவனம் வழங்கவுள்ளது.
#TataMotors #launches #AceEv #1ton #minitruck #automotiveindustry #india