டாடாவின் கலக்கல் சாதனை 32 வருடத்தில் 9 இலட்சம் வாகனம் தயாரிப்பு
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் உத்தர பிரதேசத்தில் உள்ள அதன் லக்னோ தொழிற்சாலையில் இருந்து 9 லட்சமாவது வாகனத்தை வெளியிட்டு புதிய மைல்கல்லை கடந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி கமர்ஷியல் வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸுக்கு உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் ஒரு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் முற்றிலுமாக டாடா கமர்ஷியல் வாகனங்கள், அதாவது டாடா பேருந்துகள், லாரிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், இந்த லக்னோ தொழிற்சாலையில் இருந்து வெற்றிக்கரமாக 9 லட்சமாவது வாகனத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்து வெளியிட்டுள்ளது. இதனை சிறிய நிகழ்ச்சி ஒன்றின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டாடியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், உத்தர பிரதேச மாநில தலைமை செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளும் தொழிற்சாலைக்குள் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தும் தொழிற்சாலையாக இந்திய தொழில் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
மேலும், டாடாவின் இந்த தொழிற்சாலையில் 6 மெகாவாட்ஸ் சூரிய மின் நிலையம் உள்ளதால், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கார்பனின் அளவு எப்போதும் குறைவாகவே உள்ளது. இவ்வாறு மாசற்ற பசுமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்ப செயல்படும் இந்த தொழிற்சாலையில் வாகனங்களுக்கு பெயிண்ட் மற்றும் வெல்டிங் வேலைகளை மேற்கொள்வதற்காக ரோபேட்டிக் மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன.
1992ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் ஏற்கனவே கூறியதுபோல், பேருந்துகள், கனரக லாரிகள் போன்ற கார்கோ வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி, எலக்ட்ரிக் பேருந்துகளையும் இந்த தொழிற்சாலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எப்போதும் பாலின பாகுபாடின்றி செயல்படக்கூடியது.
அந்த வகையில், இந்த லக்னோ தொழிற்சாலையிலும் பெண் தொழிலாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் முக்கியத்துவம் அளிக்கிறது. டாடா மோட்டார்ஸின் லக்னோ தொழிற்சாலையில் எல்லா விதமான வேலை நேரங்களிலும் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் பேருந்துகள் மற்றும் லாரிகளை உற்பத்தி செய்யும் பணிகள் என அனைத்து விதமான பணிகளிலும் ஈடுப்படுகின்றனர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அவர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து அவர்களது திறன்களை மேம்படுத்த மிகவும் ஆர்வம் காட்டுகிறது. டாடா மோட்டார்ஸின் இந்த லக்னோ தொழிற்சாலையில் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 22% பெண்களாவர்.
பசுமையான சுற்றுச்சூழல், மாடர்ன் டெக்னாலஜி மெஷின்கள், பெண் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் என லக்னோ தொழிற்சாலையில் அனைத்து பிரிவுகளிலும் டாடா மோட்டார்ஸ் அசத்தி வருகிறது . இவ்வாறு எல்லாவற்றையும் பற்றி சிந்திக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த தொழிற்சாலையில் வாகனங்கள் உற்பத்தியில் 9 இலட்சத்தை கடந்திருப்பது இவர்களின் தொலை நோக்கு பார்வையுடன் திட்டமிடலுக்கு ஒரு எடுத்துக்காட்டு .