இந்திய ராணுவம் மற்றும் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்
இந்திய ராணுவம் மற்றும் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்
இந்திய ராணுவம் அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு வழங்கிய ரூபாய் 800 கோடி மதிப்பிலான ஆர்டர்
இந்திய ராணுவத்தின் ரூ 800 கோடி மதிப்பிலான வாகனங்களுக்கான ஆர்டரை அசோக் லேலண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த ஆர்டரின் படி இரண்டு வகையான வாகனங்களை அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதையடுத்து 12 மாதங்களுக்குள் டெலிவரி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கனரக வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் அசோக் லேலண்ட். இந்நிறுவனம் தயாரிக்கும் வாகனங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு வகையான பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கனரக வாகனங்களை தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் இந்த நிறுவனம் தற்போது புதிய பரிமாணத்தை எடுத்துள்ளது.
அதன்படி இந்நிறுவனம் தற்போது இந்திய ராணுவத்திற்காக வாகனங்களை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. அதற்காக இந்திய ராணுவத்திலிருந்து ரூ. 800 கோடி மதிப்பிலான ஆர்டரை தற்போது அசோக் லேலண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக இரண்டு விதமான வாகனங்களை அந்நிறுவனம் தயாரித்து வழங்க வேண்டும்.
முதல் ரகம் ஆட்டிலரி டிராக்டர் எனப்படும் வாகனமாகும். இது பீரங்கிகளை இழுத்துச் செல்லக்கூடிய வாகனம். இரண்டாவது ரக வாகனம் கன் டோயிங் வாகனம். இது இலகு மற்றும் நடுத்தர எடை கொண்ட ஆயுதங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.
இந்த வாகனங்களை தயாரித்து இந்திய ராணுவத்திற்கு வழங்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரிக்கும் போது இந்திய ராணுவம் சொன்ன விதிமுறையில் படி தான் தயாரிக்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்களுக்காக வழக்கமான வாகனங்களில் இருந்து இது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.
இப்படியாக இந்திய ராணுவம் கொடுத்த ஆர்டரை அசோக் லேலண்ட் நிறுவனம் அடுத்த 12 மாதங்களுக்குள் டெலிவரி செய்ய வேண்டும். அசோக் லேலண்ட் நிறுவனத்தை பொறுத்தவரை 4X4,6X6, 8X8 ,10X10, 12X12 ஆகிய வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த நிறுவனம் கனரக வாகன பிரிவில் பல்வேறு விதமான தொழிற்நுட்பங்களை கையாண்ட அனுபவம் கொண்ட நிறுவனமாக இருக்கிறது.
இதுகுறித்து அசோக் லேலாண்ட் பிரிவின் ராணுவ வர்த்தக பிரிவு தலைவர் அமந்திப் சிங் கூறும் போது: “எங்களது வாகனங்கள் இந்திய ராணுவத்தில் மிகப்பெரிய சொத்தாக இருக்கிறது. இந்திய ராணுவத்திற்கான தனிநபர் மற்றும் சரக்கு வாகனங்களை நாங்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளோம். நாங்கள் எங்கள் தயாரிப்புகளை முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரித்து இந்தியாவிலேயே விற்பனை செய்கிறோம்”என்று கூறினார்.
இந்தியாவில் டிரக் & பஸ் விற்பனையில் முன்னணியில் இருக்கும் அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு இந்திய ராணுவம் கொடுத்துள்ள இந்த ஆர்டர் அந்நிறுவனத்திற்கு மிக முக்கிய வளர்ச்சியின் பங்காக மாறி உள்ளது.
இந்திய ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் அசோக் லேலண்ட் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது.