ஹுண்டாய் எக்ஸ்டர் எஸ்யுவி கார் அறிமுகம் – ரூ.5.99 லட்சம் அறிமுக விலை
தமிழகத்தில் உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ள ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் நாட்டிலேயே முதல்முதலாக ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வை வழங்கும் நிறுவனமாகவும், அதிக கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாகவும் விளங்கி வருகிறது.
இந்நிறுவனம் நேற்று `எக்ஸ்டர்’ என்ற பெயரில் புதிய சிறிய எஸ்யுவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், இந்த ரக கார்களிலேயே முதல்முறையாக அறிமுகமாகும். 20-க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றுடன் இது அறிமுகமாகியுள்ளது. இந்த கார் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.
எக்ஸ்டர் அறிமுக நிகழ்ச்சியில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வுன்சூ கிம் பேசும்போது, “ஹுண்டாய் நிறுவனம் தனது புரட்சிகரமான தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மூலம் எப்போதும் புதிய வரையறைகளை உருவாக்கி வருகிறது. புதிய எக்ஸ்டர் எஸ்யுவி கார் புதுமையான வடிவமைப்பு, அறிவார்ந்த தொழில்நுட்பம், சிறந்த செயல்திறன், இணையில்லா பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
உணர்வுப்பூர்வ விளையாட்டு: இந்திய இளம் கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பிரத்யேக விளம்பரத் தூதராக விளங்குவார். ஹுண்டாய் எக்ஸ்டர் முற்போக்கான மற்றும் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ஹுண்டாயின் `உணர்வுப்பூர்வமான விளையாட்டு’ என்ற வடிவமைப்பு அடையாளத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
புதிய எக்ஸ்டர் காரில் `H ‘ வடிவ பகலில் ஒளிரும் விளக்குகள், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், 6 காற்றுப்பைகள், 15 அங்குலம் அளவுள்ள அலாய் வீல்கள், ஸ்போர்டியான ரூப் ரெயில்கள், ஷார்க் ஆன்டெனா, ஓட்டுநரின் இருக்கையை மாற்றி அமைக்கும் வசதி, 391 லிட்டர் பூட் இடவசதி, குரல் உத்தரவின் மூலம் திறந்து மூடும் வசதி கொண்ட சன் ரூஃப், டேஷ்போர்டு கேமரா, 5.84 செ.மீ. அளவு கொண்ட டிஸ்பிளே, ஸ்மார்ட்வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், கால் வைக்கும் பகுதியில்விளக்கு, பின்பக்க இருக்கைகளுக்கும் ஏசி வசதி, முற்றிலும் தானியங்கி முறையில் குளிர்பதன வசதி, ஸ்மார்ட் கீ, புஷ்பட்டன் ஸ்டார்ட், பின்பக்க கண்ணாடியில் வைப்பர் & வாஷர், குளிர்
சாதன பெட்டி, 10.67 செ.மீ. இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம், 12 மொழிகளை புரிந்து செயல்படும் வசதி, டயரில் காற்று அழுத்தத்தை தெரிவிக்கும் வசதி என ஏராளமான வசதிகளைக் கொண்டுள்ளது.
எக்ஸ்டர் எஸ்யுவி கார்கள் 6 தனி வண்ணங்களிலும், 3 இரட்டை வண்ணச் சேர்க்கையிலும் கிடைக்கின்றன. மேலும் பெட்ரோல், சிஎன்ஜி ஆகியவற்றில் இயங்கும் வகையிலும் கிடைக்கின்றன. இவற்றுக்கு 3 ஆண்டு வரம்பற்ற கி.மீ. உத்தரவாதம் உண்டு. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#automobileindustry #india #cars #SUV #HyundaiEXTER