அசோக் லேலண்ட் ஓசூர் ஆலையில் 100% பெண் தொழிலாளர்கள்
அசோக் லேலண்ட் ஓசூர் ஆலையில் 100% பெண் தொழிலாளர்கள்

நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனமான அசோக் லேலண்ட் பெண்களை போற்றும் விதமாக அசத்தலான ஓர் காரியத்தை துவங்கியுள்ளது.
இந்துஜா குழுமத்தின் கீழ் செயல்படும் முன்னணி கமர்ஷியல் வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சென்னைக்கு அருகே எண்ணூர் பகுதியில் அசோக் லேலண்டிற்கு தொழிற்சாலை உள்ளது. அத்துடன் அசோக் லேலண்டிற்கு ஓசூர் மற்றும் ஃபண்ட் நகரிலும் தொழிற்சாலைகள் உள்ளது.
இந்த ஓசூர் தொழிற்சாலையில் தான் 80 பெண் தொழிலாளர்கள் கொண்டு 100% பெண்களால் இயங்கும் பிரோடக்ஷன் லைனை அசோக் லேலண்ட் துவங்கியுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உற்பத்தி தொழிற்துறைக்கு பெண்களை அழைத்து வருதல் என்கிற 2 நோக்கங்களின்படி இந்த நடவடிக்கையை மகளிர் தின வாரத்தில் அசோக் லேலண்ட் மேற்கொண்டு இருக்கிறது. அதேநேரம் நிறுவனத்தின் வாகன உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்பதும் அசோக் லேலண்டின் திட்டமாகும்.
இந்த வகையில் அசோக் லேலண்டின் ஓசூர் தொழிற்சாலையில் புதிய என்ஜின் லைனில் பணியமர்த்தப்பட்டுள்ள 80 பெண் தொழிலாளர்கள் ஆலையில் தயாரிக்கப்படும் கமர்ஷியல் மற்றும் கனரக வாகனங்களில் பொருத்தப்படும் என்ஜின்களை உற்பத்தி செய்யும் பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்காக இந்த பெண் தொழிலாளர்களை பயிற்றுவிக்கவும், அவர்களது திறன்களை மேம்படுத்தவும் குறிப்பிடத்தக்க தொகையை அசோக் லேலண்ட் முதலீடு செய்துள்ளது.
இதுகுறித்து அசோக் லேலண்டின் சிஇஓ-வும், நிர்வாக இயக்குனருமான ஷேனு அகர்வால், “அசோக் லேலண்டில் பன்முகத்தன்மை மற்றும் திறமைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாலின மற்றும் இன வேறுபாடின்றி சம வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். பெண்களுக்கு இந்த வாய்ப்புகளை வழங்குவது அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் குடும்பம் மற்றும் சமூகத்தின் வாழ்க்கையையும் மேம்படுத்துகிறது.
இந்த முயற்சி ஆனது ‘கோய் மன்சில் டூர் நஹின்’ என்ற எங்களது பிராண்ட் தத்துவத்திற்கு ஏற்ப உள்ளது. இந்த பெண்களின் திறமைகளை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் கனவுகளை நிஜமாக்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பாலின சமநிலையை நிறுவுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இதுபோன்ற முயற்சிகள், எல்லாவற்றையும் நன்கு உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகின்றன” என்றார்.