
உலகளாவிய என்சிஏபி (NCAP) மோதல் சோதனையில் அடுத்தடுத்து முழு 5 ஸ்டார்களை அள்ளிய கார்களை தயாரிக்கும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம் என்ற பெருமை உடன் உலகளவில் கவனிக்கத்தக்க பிராண்டாக உருவெடுத்த டாடா மோட்டார்ஸ் 1990களின் தான் பயணிகள் வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் இறங்கியது. 1991இல் டாடா சியாரா மூலம் இந்த அற்புத நிகழ்வு நடந்தது.
அதுவரையில் கமர்ஷியல் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து வந்த டாடா குழுமம் அதன்பின் குறைவான எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்கக்கூடிய கார்களையும் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தது. அதன்பின் இந்த துறையில் டாடா கண்ட ஏற்றமும், இறக்கங்களும் பல. தற்போது ஒருவழியாக 32 வருடங்களுக்கு பின் கார்கள் உற்பத்தியில் 50 இலட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இந்த நிகழ்வை சிறப்பிக்க ஓர் அசத்தலான காரியத்தை டாடா தொழிற்சாலைக்குள் பணியாளர்கள் செய்துள்ளனர்.
டாடாவின் தொழிற்சாலை ஒன்றிற்குள் வட்டமான அசெம்பிள் லைனில் ’50 லட்சம்’ என்பதை ஆங்கிலத்தில் தெரிவிக்கும் விதத்தில் பணியாளர்கள் கார்களை நிறுத்தி உள்ளனர். மேலும் இதனை ஆகாயத்தில் இருந்து படம்பிடித்து வெளியீடு செய்தும் உள்ளனர். இதற்காக டாடாவின் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார்களான அல்ட்ராஸ், நெக்ஸான், பஞ்ச், டியாகோ, டிகோர், ஹெரியர் மற்றும் சஃபாரி கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளையில், இந்த 50 இலட்ச கார்கள் உற்பத்தி மைல்கல்லை நினைவில் வைத்து கொள்ளும் விதமாக சில கொண்டாட்டங்களில் ஈடுப்படவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. பொதுவாக, இவ்வாறு ஒரு மைல்கல்லை கடந்தால், அதனை மக்களிடமும், காரை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடமும் தெரிவிக்கும் விதத்தில் டீலர்ஷிப்களிலும், விற்பனை மையங்களிலும் பதாகைகளும், அலங்கரிப்புகளும் மேற்கொள்ளப்படும். அது போன்றதான கொண்டாட்டங்களை குறைந்தது அடுத்த 1 மாதத்திற்கு டாடா டீலர்ஷிப்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் காணலாம்.
1991இல் பயணிகள் கார்கள் தயாரிப்பில் இறங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10 இலட்சமாவது காரை தொழிற்சாலையில் இருந்து 2004இல் வெளியேற்றியது. 2010இல் இந்த எண்ணிக்கை 20 இலட்சத்தையும், 2015இல் 30 இலட்சத்தையும், 2020இல் 40 இலட்சத்தையும் தொட்டது.