ComponentsNews

ஆட்டோமொபைல் பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மேல் முதலீடுகள் செய்யவேண்டும்

ஆட்டோமொபைல் பாகங்களை தயாரிக்க மேல் முதலீடுகள் வேண்டும்

இந்தியாவில் வாகன உற்பத்தி என்பது பல மடங்கு உயர்ந்து வருகிறது. குறிப்பாக வாகன உதிரிபாகத் துறையானது உள்ளூர்மயமாக்கல், உற்பத்தித் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதில் தற்போது சில நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மாருதி சுசுகியின் செயல் தலைவர் கெனிச்சி அயுகாவா புதன்கிழமை நடந்த சந்திப்பு ஒன்றில் தெரிவித்து கொண்டார்.

ACMA-இன் (வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம்) 62வது ஆண்டு அமர்வில் பேசிய அயுகாவா, ஆட்டோமொபைல் தொழில்துறை அமைப்பான SIAM-இன் தலைவரும் ஆவார். இவர் வாகன உதிரிபாகத் துறையின் வளர்ச்சியை உறுதிப்படுத்த உள்ளூர்மயமாக்கல் எந்த அளவிற்கு அவசியம் என்பதை குறிப்பிட்டு பேசினார். “நாம் மிகவும் ஆழமாகச் சென்று மூலப்பொருள் உட்பட சிறிய கூறுகளை கண்டறிந்து அவற்றை உள்ளூர்மயமாக்குவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்,” என்றும் அவர் கூறினார். தொழில்துறை உயர் தரத்தை மேம்படுத்துவதிலும், நிலைநிறுத்தப்படுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

மேலும் சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அதில், “உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் இந்திய ஆட்டோமொபைல் துறை பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த பெரிய அளவில், தரம் மிக உயர்ந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. எந்தவொரு சிறிய தவறும் தொழில்துறைக்கு மட்டுமல்ல, ‘மேக் இன் இந்தியா’ என்ற பிராண்டிற்கும் தீங்கு விளைவிக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார். புதிய எதிர்கால தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது வாகன உதிரிபாகத் துறையை கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு பகுதி என்று அயுகாவா கூறினார்.

2070-க்குள் கார்பன் உமிழ்வை 0% என்று கொண்டு வர வேண்டும் மற்றும் 2030-க்குள் 45 சதவீதத்தை குறைக்கும் இலக்கை பிரதமர் உறுதி செய்துள்ளார். இந்த இலக்குகளை அடைவதற்கான நமது டி-கார்பனைசேஷன் பயணத்தில், தொழில்துறையானது அனைத்து சாத்தியமான எதிர்கால தொழில்நுட்பங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறினார். முக்கிய வணிகங்களில் தொடர்ந்து முதலீடு செய்யுமாறு தொழில்துறையினரை கேட்டுக் கொண்டார்.

“மாருதி சுஸுகியில் உள்ள தனது சப்ளையர் பார்ட்னர்களிடம் தான் எப்போதும் சொல்வது இதுதான். முக்கிய வணிகத்தில் மறு முதலீடு செய்வது மிகவும் முக்கியம். இது உங்கள் நிதியை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சவால்களைச் சமாளிக்கும் திறனையும் மேம்படுத்துகிறது,” என்று அவர் கூறினார். SIAM மற்றும் ACMA ஆகியவை ஒத்துழைத்து, தொழில்துறையின் வளர்ச்சியை மீண்டும் கொண்டு வரவும் தக்கவைக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அயுகாவா கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ACMA-வின் தலைவர் சுஞ்சய் கபூர் கூறுகையில், பயணிகள் மற்றும் வணிக வாகன விற்பனையானது கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், பண்டிகைக் காலத்தில் இரு சக்கர வாகன விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) 850-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் வாகன உதிரிபாக தொழில்துறையின் வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கிறது என்று குறிப்பிட்டு பேசினார். இவை அனைத்துமே இந்திய பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும்.

#automobileindustry #india #autocomponents #siam #ACMA

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button