NewsUncategorized

ராகுல் பஜாஜ்

தொழிலதிபர்களில் இவர் துணிச்சலானவர்!

மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் சகஜம்தான். ஆனால், சில மனிதர்கள் மட்டும் இறக்கும்போது எல்லோரும் பேசுவார்கள்.
அப்படிப்பட்ட ஒரு பிசினஸ்மேன்தான் பஜாஜ் நிறுவனத்தின் தலைவராக இருந்த ராகுல் பஜாஜ். 12.02.2022 அன்று அவர் தன்னுடைய 83-வது வயதில் காலமானார்.
1938-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார் ராகுல் பஜாஜ். இவரின் தாத்தா ஜம்னாலால் பஜாஜ் 1926-ம் ஆண்டு பஜாஜ் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். தொழில் குடும்பத்தில் பிறந்ததால், குடும்பத் தொழிலை ஏற்று நடத்தத் தேவையான பயிற்சி ராகுல் பஜாஜுக்கு அளிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்தவர், பிறகு அமெரிக்காவில் ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்.பி.ஏ படித்தார்.
படித்து முடித்தவுடன் பஜாஜ் நிறுவனத்தில் துணை பொது மேலாளராகப் பதவியேற்றார். அப்போது அவரின் தந்தை கமல்நயன் பஜாஜ், பஜாஜ் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். பஜாஜ் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் சில ஆண்டுக் காலம் பயிற்சி பெற்ற பின்பு, 1968-ல் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 30.
இரு சக்கர வாகனங்களை இந்தியாவின் ஒவ்வொரு தனிமனிதனும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார். பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்பான `சேட்டக்‘ மற்றும் `பிரியா’ ஆகிய இரண்டு பிராண்டுகளே 70 மற்றும் 80-களில் பிரபலமான இரு சக்கர வாகனங்களாக இருந்தன. `ஹமாரா பஜாஜ்’ என்கிற விளம்பரப் பாடல் எல்லோரும் விரும்பிப் பாடும்படி செய்தார்.
பஜாஜ் நிறுவனத்தின் பொறுப்பை அவர் ஏற்பதற்கு முன்பு வரை அந்த நிறுவனம் இரு சக்கர வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்துவந்தது. ஆனால், ராகுல் பொறுப்பேற்றபின், வீட்டு உபயோகப் பொருள்கள், மின் விளக்குகள், காற்றாலை, ஆயுள் காப்பீடு, நுகர்வோர் கடன், முதலீடு எனப் பல துறைகளில் செயல்படும் பெரும் நிறுவனமாக வளர்த்தெடுத்தார். 1968-ல் அவர் பொறுப்பேற்கும்போது வெறும் ரூ.7.2 கோடியாக இருந்த அந்த நிறுவனத்தின் விற்றுவரவை பல ஆயிரம் கோடிகளுக்கு உயர்த்தினார் ராகுல்.
2008-ம் ஆண்டு பஜாஜ் நிறுவனத்தை பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஹோல்டிங் கம்பெனி என மூன்று பெரும் நிறுவனங்களாகப் பிரித்தார். பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை அவரின் மூத்த மகன் ராஜீவ் பஜாஜிடம் ஒப்படைத்தார். அவரின் இளையமகன் சஞ்சீவ் பஜாஜுக்கு பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தை அளித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் ஒரு போராளியாக இருந்தார் ராகுல் பஜாஜ். தனது கருத்துகளை தன் மனதுக்குள் மறைத்து வைத்துக்கொள்ளாமல் நேர்மையாகப் பேசும் குணம் கொண்டவர். எமர்ஜென்சி காலத்தில் தொழில் நிறுவனங்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது, அதைக் கடுமையாக எதிர்த்தார் ராகுல் பஜாஜ். 1990-ல் பிரதமர் நரசிம்ம ராவ் தாராளமயமாக்கலைக் கொண்டுவந்தபோதும், இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று கடுமையாகப் போராடினார்.
2009-ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்றிருந்த இவரின் மகன் ஸ்கூட்டர் உற்பத்தி செய்வதைக் குறைத்துவிட்டு, மோட்டர் சைக்கிளுக்கு மாறியபோது, “என் மனது காயப்பட்டுவிட்டது. இதை நான் மோசமாக உணர்கிறேன்’’ என்று சொன்னார். ஆனால், ராஜிவ் பஜாஜ் பல விஷயங்களை சிந்தித்தே இந்த மாற்றத்தைச் செய்தார் என்பதைப் பிற்பாடு புரிந்துகொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசினார் ராகுல் பஜாஜ். “நீங்கள் நிறைய நல்லது செய்கிறீர்கள். ஆனால், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் உங்களுக்கு வரவில்லையே!’’ என்று பேச, அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த சலசலப்புக்கு ராகுல் பஜாஜ் அஞ்சவே இல்லை.
கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க மத்திய அரசாங்கம் ஊரடங்கு நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதைக் கடுமையாக எதிர்த்தார். “நோய் பரவுவதைத் தடுக்க நீங்கள் காட்டும் அக்கறையைவிட தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை முடக்குவதிலேயே ஆர்வம் காட்டுவது ஏன்’’ என்று அவர் கேட்க, அவரது கருத்தைத் தொழில் துறையைச் சேர்ந்த பலரும் வரவேற்றனர்.
இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சிக்காகத் தானாக முன்வந்து பாடுபட்டவர் ராகுல் பஜாஜ். 1979&80, 1999&2000 என இரு முறை சி.ஐ.ஐ அமைப்பின் தலைவராக இருந்தார் ராகுல் பஜாஜ். அவரைத் தவிர வேறு யாரும் இந்தப் பதவியை இருமுறை வகித்ததில்லை. இந்தியன் ஏர்லைன்ஸ், மும்பை ஐ.ஐ.டி ஆகிய அமைப்புகளுக்குத் தலைவராக இருந்து வழிநடத்தினார். பத்ம பூஷண் போன்ற பெருமைக்குரிய விருதுகளை எல்லாம் அவர் பெற்றிருந்தாலும், தொழில்முனைவோர்களின் நலனுக்காகக் கடைசி வரை போராடியவர் ராகுல் பஜாஜ். அவரைப் போன்ற பிசினஸ்மேன்கள் பல ஆயிரம் பேர் தோன்ற வேண்டும் என்பதே அவரது ஆசை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button