பெட்ரோல், சிஎன்ஜி எஞ்ஜின் தேர்வில் பியாஜியோ ஆட்டோஅறிமுகம்
Piaggio launches hybrid 3 wheelers
பியாஜியோ நிறுவனம் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எஞ்ஜின் தேர்வில் மூன்று சக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.
பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பியாஜியோ, 300 சிசி திறன் கொண்ட மூன்று சக்கர வாகனங்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் அவை விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றன.
அபே எக்ஸ்ட்ரா எச்டி பெட்ரோல் (கார்கோ ரக வாகனம்), அபே எக்ஸ்ட்ரா எச்டி சிஎன்ஜி (கார்கோ ரக வாகனம்), அபே ஆட்டோ டிஎக்ஸ் எச்டி சிஎன்ஜி (பயணிகள் வாகனம்) ஆகியவற்றையே பியாஜியோ இந்திய மூன்று சக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இதில், எச்டி பெட்ரோல் கார்கோ ரக வாகனத்திற்கு ரூ. 2.24 லட்சம் என்ற விலையும், எச்டி சிஎன்ஜி கார்கோ ரக வாகனத்திற்கு ரூ. 2.45 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, பயணிகள் வாகனமாக விற்பனைக்கு வந்திருக்கும் டிஎக்ஸ் எச்டி சிஎன்ஜி வாகனத்திற்கு ரூ. 2.55 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பியாஜியோ நிறுவனம், 300 சிசி வாட்டர் கூல்டு எஞ்ஜினையே மூன்று புதுமுக 3 சக்கர வாகனங்களிலும் பயன்படுத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 11.39 பிஎச்பி மற்றும் 22.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இது சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் எஞ்ஜினின் திறனாகும். இதன் பெட்ரோல் எஞ்ஜினானது 12 பிஎச்பி மற்றும் 24 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இணைந்து இயங்கும். மூன்று சக்கர வாகனத்தை பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் களமிறக்குவது இதுவே முதல் முறையாகும்.
வேறு எந்த நிறுவனமும் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மூன்று சக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, தனது அபே ஆட்டோ எச்டி பயணிகள் வாகனத்தையும் பெட்ரோல் தேர்வில் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது மிக விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் கார்கோ வாகனங்கள் மூன்று விதமான உடல் அளவுகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும்.
5.0 அடி, 5.5 அடி மற்றும் 6.0 அடி ஆகிய அளவுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும். வர்த்தக வாகன பிரியர்களைக் கவரும் நோக்கில் இந்த மூன்று விதமான அளவுள்ள கார்கோ வாகனங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இது பல வகைகளில் வர்த்தக வாகன துறையில் தனது பயன்பாட்டை வழங்கும்.