அப்பல்லோ டயர்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனமும் இணைந்து லாரி ஓட்டுநர்களுக்காக ‘சாரதி ’(Saarthi) என்ற பெயரில் கோவிட் தொடர்பான உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளன
Apollo tyres & Ashok Leyland launch "saarthi" Covid Helpline for truckers

அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres) மற்றும் அசோக் லேலண்ட்(Ashok Leyland) இணைந்து லாரி ஓட்டுநர்களுக்காக ‘சாரதி’ (Saarthi) என்ற பெயரில் கோவிட் உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளன. லாரி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு உதவும் உன்னதநோக்கத்துடன் இந்த உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த உதவி எண் (ஹெல்ப்லைன் – helpline ) வாயிலாக கோவிட்-19 தொற்று தொடர்பான ஆலோசனை, தடுப்பூசி தொடர்பான ஆலோசனைத் தகவல்கள் மற்றும் கோவிட் அல்லாத பிற நோய்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் இந்த உதவி எண் சேவை இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் அஸ்ஸாமி ஆகிய 5 மொழிகளில் கிடைக்கிறது. டெலிராட் ஃபவுண்டேஷன்(Telerad Foundation) இந்த உதவி எண் சேவைக்கான தொழில்நுட்பக் கூட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த எண் வாயிலான சேவைகளையும் ஆலோசனைகளையும் பெற, லாரி ஓட்டுநர் சங்கத்தின் உறுப்பினர்கள் 7028105333 என்ற எண்ணில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அழைக்கலாம்.
கோவிட் பரிசோதனையின் போது தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள லாரி ஓட்டுநர் சங்க உறுப்பினர்கள், இந்த உதவி எண்ணை அழைப்பதன் மூலம் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறலாம். நோய்த் தொற்றுக் காலத்தில் அவர்கள், ஊட்டச்சத்து பற்றிய வழி காட்டுதலையும் பெறலாம். கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு, ‘சாரதி’ முன் முயற்சியின் ஒரு பகுதியாக மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் மருந்துகளின் பரிந்துரை வழங்கப்படும்.
தடுப்பூசி குறித்த வழிகாட்டுதல்களைப் பெற விரும்பும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த உதவி எண் மிகவும் பயனுள்ளதாக அமையும். தடுப்பூசி தொடர்பான அவர்களது சந்தேகங்களைத் தீர்ப்பது, தடுப்பூசிக்காக கோவின் மற்றும் ஆரோக்யசேது இணைய தளங்களில் பதிவு செய்ய உதவுவது, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தேதி மற்றும் நேரத்தைப் பெற்று திட்டமிடுவது, தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கும் செய்வது, தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் தேவைப்படும் மருத்துவ உதவிகள் போன்றவை தொடர்பாக உதவி மற்றும் ஆலோசனைகள் தேவைப்பட்டால் அவற்றுக்கும் இந்த உதவி எண் மூலம் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
1994-ம் ஆண்டு முதல், அசோக் லேலண்ட் நிறுவனம் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் ஓட்டுநர்களுக்கு சிறப்பான முறையில் வாகனம் ஓட்டும் நடைமுறைகள் குறித்து கல்வி கற்பித்து வருகிறது. தற்போது, இந்த நிறுவனத்தின் சார்பில் 11 ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இவை தொடங்கப்பட்டதில்இருந்து இதுவரை 14 லட்சத்து 82 ஆயிரத்து 462 ஓட்டுநர்கள் பல் வேறு அமர்வுகளில் ஓட்டுநர் பயிற்சி தொடர்பான கல்வியைக் கற்றுள்ளனர்.
அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் 2000-ம் ஆண்டில் லாரி ஓட்டுநர்களுக்கான தனது சுகாதார சேவை நடவடிக்கையைத் தொடங்கியது. 31 மையங்கள் மூலம், ஹெச்.ஐ.வி-எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு, கண் பார்வை பராமரிப்பு, காச நோய் மற்றும் பிற சுகாதார சேவைகள் என பல சேவைகளை வழங்கி கிட்டத்தட்ட 50 லட்சம் பேரை சென்றடைந்துள்ளது. லாரி ஓட்டுநர்களுக்காக ஆற்றியுள்ள பல முன்னோடியான மற்றும் திறன் வாய்ந்த சேவைகளுக்காக பல விருதுகளை அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் வென்றுள்ளது.