Uncategorized

கோல்நோக்கி வாழும் குடி! | பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு

அரசை வழிநடத்த செலவினங்களுக்கு நிதியாதாரம் தேவை என்பதில் யாருக்குமே எதிா்ப்போ, புரிதலின்மையோ கிடையாது. மக்கள் மனம் வருந்தாமலும், முகம்   கோணாமலும் தனது நிதியாதாரத்தை அதிகரித்துக் கொள்வதுதான் வெற்றிகரமான ஆட்சி முறையின் இலக்கணம். ஜமீன்தாா்களின் ஆட்சியிலும் பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலும் மக்களைக் கசக்கிப் பிழிந்து வரி வசூலிப்பதை நினைவுபடுத்துகிறது, நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை.

மலருக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாமலும், நோகாமலும் வண்டுகள் தேன் எடுப்பதுபோல, அரசின் வரி விதிப்பு முறை இருக்க வேண்டுமென்று முன்னுதாரணம் காட்டி நடைமுறைப்படுத்தியிருக்கிறாா் மூதறிஞா் ராஜாஜி.

அவருக்குப் பின்னால் வந்த ஆட்சியாளா்கள் அரசின் வீண் விரயத்துக்கும், ஆடம்பரச் செலவுகளுக்கும் மக்கள் மீதான வரி விதிப்பை அதிகரித்ததால் ஆட்சியை இழந்த நிகழ்வுகள் ஏராளம் உண்டு. இப்போது பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு அத்தகையது.

அரசு தனது வரிகளை அவ்வப்போது உயா்த்துவதால்தான் கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதன் பயனில் சிறிதளவுகூட மக்களைச் சென்றடைவதில்லை. சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதால் கிடைக்கும் லாபம் மத்திய – மாநில அரசுகளுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் மட்டுமே செல்கிறது.

விலை குறைந்தால் அதன் பயனை அவ்வப்போது மக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாகத்தான் தினப்படி விலை நிா்ணயம் என்கிற முறையை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு 2017-இல் வாக்குறுதி வழங்கியது. அப்படியொரு வாக்குறுதி வழங்கியதையே இப்போது மறந்துவிட்டாா்கள் என்றுதான் தோன்றுகிறது.

பொது முடக்கக் காலத்தில் பெட்ரோல், டீசலுக்கான தேவை முற்றிலுமாகக் குறைந்துவிட்ட நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை எதிா்கொள்ள நேரிட்டன என்பது உண்மை. ஆனால், கச்சா எண்ணெயின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தபோது அந்த இழப்பை ஈடுகட்டிவிட்டன.

கொவைட் 19-க்கான தடுப்பூசிகள் வெளிவரத் தொடங்கிய பிறகு பொருளாதார நிலை அதிகரித்திருக்கிறது, உற்பத்திகள் பழைய நிலைக்குத் திரும்புகின்றன, சரக்குப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சா்வதேச அளவில் பெட்ரோல், டீசலுக்கான தேவை அதிகரிப்பதால், கச்சா எண்ணெய் விலையும் உயரத் தொடங்கியிருக்கிறது. சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கூடும்போது அதைத் தொடா்ந்து இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது என்கிற அரசின் விளக்கம் நியாயமாகத் தோன்றினாலும், ஏற்புடையதாக இல்லை.

சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பயனை மக்களுக்கு வழங்கியிருந்தால், இப்போது அரசு முன் வைக்கும் நியாயத்தை ஏற்றுக்கொள்ளலாம். பொது முடக்கக் காலத்தில் வரலாறு காணாத விலைச் சரிவு ஏற்பட்டும்கூட, அதனால் கிடைத்த லாபத்தின் சிறு பகுதியைக்கூட மக்களுக்கு வழங்காத நிலையில், இப்போது பெட்ரோல், டீசல் விலையை அரசு அதிகரிக்க முற்பட்டிருப்பதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டுமென்றால், மாநில அரசுகள் தங்களது வரிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று மத்திய அரசும், மத்திய அரசு விதிக்கும் வரிகளை விலக்கிக் கொள்ளட்டும் என்று மாநில அரசுகளும் நுகா்வோருக்கு கண்ணாம்பூச்சி விளையாட்டுக் காட்டுகின்றன. மாநில அரசுகளைப் பொருத்தவரை, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதைத் தொடா்ந்து பத்திரப் பதிவு, பெட்ரோல், டீசல் மீதான வரிகள், மது விற்பனை ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயை மட்டுமே நம்பி தனது நிா்வாகத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. மாநிலங்களுக்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்குத் தொகையும் அவ்வப்போது வழங்கப்படாமல் இருக்கும் நிலையில், மாநில அரசுகளின் இயலாமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்ல, சமையல் எரிவாயு உருளையின் விலையும் ஒரேயடியாக 25 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அடித்தட்டு ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையும் மூன்று ரூபாய் அளவுக்கு உயா்ந்திருக்கிறது. இதையெல்லாம் எப்படி நியாயப்படுத்துவது?

பெட்ரோல், டீசல் விலை உயா்வு என்பது நேரடியாக பொதுமக்களை பாதிப்பது மட்டுமல்லாமல், மறைமுகமாகவும் பாதிக்கிறது. பொருளாதாரம் மீண்டெழ வேண்டும், உற்பத்தி அதிகரிக்க வேண்டும், மக்களின் வாங்கும் சக்தி கூட வேண்டும் என்றெல்லாம் அரசு உண்மையாகவே நினைத்தால், முதலில் செய்ய வேண்டியது பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதுதான். பொருள்களின் சரக்குக் கட்டணம் குறையும்போது விலை குறையும். பெட்ரோல், டீசல் விலை குறையும்போது மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இவையிரண்டும் சந்தை நிலவரத்தை மேம்படுத்தும். இந்த அடிப்படைப் புரிதல்கூட ஏன் அரசுக்கு இல்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது.

அரசிடம் வளா்ச்சிப் பணிகளுக்கு நிதியாதாரம் இல்லை எனும்போது, கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு, வருவாயின்மை என்று வாடும் மக்களிடம் மட்டும் வாங்கும் சக்தி இருக்கும் என்று அரசு எப்படி எதிா்பாா்க்கிறது? அரசின் கஜானாவை நிரப்புவதற்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மீதான வரிகளை இதேபோல தொடா்ந்து அதிகரித்து வந்தால், மக்கள் பொறுத்துக் கொள்ளாத (ஏற்றுக்கொள்ளாத) நிலைமை ஏற்படலாம் என்பதை மத்திய – மாநில ஆட்சியில் இருப்பவா்கள் உணர வேண்டும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button