தமிழகத்தில் மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் 2,200 வாகனங்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 76 லட்சத்து 23 ஆயிரத்து 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கி வருகிறது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுதவிர இறங்குமதி செய்து பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்துவதால், அதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது.
மேலும் பெட்ரோல், டீசல் பயன்பாடு நாட்டில் அதிகமாக இருப்பதால், சுற்றுச்சூழலும் கடுமையான மாசுபாட்டை சந்திக்கிறது. எனவே சம்மந்தப்பட்ட இப்பிரச்னைகளை களைவதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் ‘பேட்டரி’யால் இயங்கும், கார், பைக் உள்ளிட்ட எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தும்படி மக்களிடத்தில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்திலும் மின்சாரத்தினாலும் இயங்கும் வாகனங்களை அதிகமானோர் பயன்படுத்துவதற்கு வசதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை-2019 வெளியிடப்பட்டது. இதன்படி மின்சாரவாகனங்களை இயக்குவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி அனைத்து மின்சார இருசக்கர வாகனங்கள், கார்கள், மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு 100 சதவிகித மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும். இந்த வரி விலக்கு, 2022 ஆம் ஆண்டு இறுதி வரை வழங்கப்படும். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான மாநில சரக்கு மற்றும் சேவை வரி 100 சதவிகிதம் திரும்ப வழங்கப்படும். இந்த சலுகை 2030ம் ஆண்டு வரை வழங்கப்படும்.
அரசு தொழிற் பூங்காக்களில், மின்சார வாகனங்கள், மின் ஏற்று உபகரணங்கள் மற்றும் மின்கலன்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு, நிலத்தின் விலையில் 20 சதவிகிதம் வரை மானியமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் தமிழக மின்சாரவாரியமும் மின்சார வாகனங்களுக்கான பொது சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இதுபோன்ற நடவடிக்கைகளின் காரணமாகவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பலரும் தற்போது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டில் 19 லட்சத்து 68 ஆயிரத்து 35 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது.
இதில், மின்சாரவாகனத்தின் விற்பனை 3 ஆயிரத்து 444 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இதுவே கடந்த 2020ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 14 லட்சத்து 92 ஆயிரத்து 185 வாகனங்கள் விற்பனையாகியிருக்கிறது. இதில், மின்சாரவாகனங்களில் எண்ணிக்கை 5 ஆயிரத்து 696 ஆகும். இது கடந்த 2019ம் ஆண்டைவிட 2 ஆயிரத்து 252 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகியிருக்கிறது. வரும்காலங்களில் மேலும் மின்சாரவாகனங்களின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.